சுற்றுச்சூழலை பாதுகாக்கும் "மிஷன் லைப்" சர்வதேச செயல் திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். வீடுகளில், ஏசியின் வெப்பநிலையை 17 டிகிரி செல்சியஸ் மக்கள் வைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை, பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாறிவரும் நவீன உலகில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் "மிஷன் லைப்" எனும் சர்வதேச செயல் திட்டத்தை, பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார்.
குஜராத்தின் கேவாடியாவில் இன்று நடைபெற்ற விழாவில், ஐ.நா பொதுச்செயலாளர் குட்டரெசுடன் இணைந்து, இந்த திட்டத்தினை மோடி தொடங்கி வைத்தார்.
உலகம் முழுவதும் பருவ நிலை மாற்றம், பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இதனை எதிர்கொள்ள, "மிஷன் லைப்" திட்டம் கைகொடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
வீடுகளில் சிலர், ஏசியின் வெப்பநிலையை, 17 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வைப்பதாகவும், இது, சுற்றுச்சூழலில் பாதகமான எதிர்வினைகளை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா பொதுச்செயலாளர் குட்டரெசும், பருவநிலை மாற்றத்திலிருந்து உலகை பாதுகாக்க, ஒருமித்த பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
பிரான்ஸ், மாலத்தீவு, மடகாஸ்கர் அதிபர்களும், பிரிட்டன், ஜார்ஜியா, எஸ்டோனியா பிரதமர்களும், "மிஷன் லைப்" தொடக்க நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக உரையாற்றினர்.
இதனிடையே, குஜராத்தின் தபி மாவட்டத்தில் சுமார் ஆயிரத்து 970 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் .
வியாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சாப்புட்டரா பகுதியில் இருந்து ஒற்றுமைக்கான சிலை வரை சாலையை மேம்படுத்தும் பணிகள் மற்றும் குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.